கோல சிலாங்கூர், பிப்.15-
நாடு முழுவதும் உள்ள தோட்டங்களில் வேலை செய்து வருகின்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் நல்லதொரு வீட்டு வசதியைப் பெற்றிட, PRR என சுருங்க அழைக்கப்படும் Program Residensi Rakyat மக்கள் வீட்டுடைமைத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெரிய தோட்டங்களை நிர்வகித்து வரும் தோட்ட உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற தோட்டத்திலேயே ஒரு நிலப்பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வேலை செய்து வருகின்ற அனைத்து குடும்பங்களுக்கு PRR எனும் Program Residensi Rakyat வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு வழிவிடப்பட வேண்டும் என்று தோட்ட உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

கோலசிலாங்கூர், பத்தாங் பெர்ஜுந்தை, Bestari Jaya-வில் இன்று PRR Harmoni Madani Bestari Jaya என்ற அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரிய, பெரிய தோட்டங்களில் அதிகமான இந்தியர்கள் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுமைத் திட்டத்திற்கு பெரிய பெரிய தோட்ட நிர்வாகங்கள் பத்து ஏக்கர் அல்லது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்பதில்லை. மாறாக, ஒரு வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படும் அளவிற்கு ஒரு சிறு நிலப்பகுதியை ஒதுக்கித் தந்தாலேயே போதுமானதாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பெரிய தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த PPR Harmoni Madani Bestari Jaya வீடமைப்புத் திட்டத்திற்கு அரசாங்கம் 75 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கும் கலந்து கொண்டார்.