ஜார்ஜ்டவுன், பிப்.16-
பினாங்கு, பூலாவ் தீகூஸ், ஜாலான் பேராக்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை காகிதப் பையில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தீமூர் லாவூட் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அப்துல் ரோஸாக் முகமட் கூறுகையில், குழந்தையின் தாய் என்று நம்பப்படும் ஒரு பெண் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பேருந்து நிறுத்தத்தில் காகிதப் பையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது எனவும் கூறினார்.
விசாரணையில், ஆண் குழந்தை அதன் தாயாக நம்பப்படும் சந்தேக நபர்களால் காலை 8.03 மணியளவில் கைவிடப்பட்டது தெரியவந்தது. விரைவாகச் செயல்பட்ட காவல் துறையினர், குழந்தையின் தாய் என்று நம்பப்படும் 20 வயதுடைய உள்ளூர் பெண்ணை ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிற்பகல் 2.20 மணியளவில் கைது செய்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.