நாகரீகமற்ற மனப்பான்மையில் இருக்கிறோம்: டத்தோ சிவகுமார் வருத்தம்

கோலாலம்பூர், பிப்.17-

இனதுவேஷத் தன்மையில் எழுதப்பட் வாசகத்தை உள்ளடக்கிய அறிவிப்பை சோள வியாபாரி ஒருவர் வெளிப்படையாக காட்சிக்கு வைத்திருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருப்பது இந்தியர்களிடை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவும், உலக நாடுகளும் AI பயன்பாடு, தொழில்நுட்ப செயல்திறன் மற்றும் பல்வேறு முன்னேற்றங்களின் சகாப்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும், மலேசிய மக்களின் மனமும், போக்கும் இன்னுமும் குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும், நாகரிகமற்றதாகவும் இருப்பது வேதனையை அளிக்கிறது என்று மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்புப் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இனதுவேஷ தன்மையிலான இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பல முறை விவாதிக்கப்பட்டு, கேள்வி, எழுப்பட்டும், இத்தகைய இனவாதிகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்பாடாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

மலிவான விளம்பரத்திற்காக, சில வியாபாரிகள், மற்ற இனங்களை இழிவுபடுத்துவது போன்ற தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களின் வியாபாரம் சமூக வலைளத்தளங்களில் வைரலாகி, எதிர்பார்க்க முடியாத வருமானத்தை சம்பாதிக்க முடியும் என்று மனப்பால் குடித்து வருகின்றனர் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

ஆனால், இது போன்ற செயல்கள், மலேசியர்களிடையே இதுநாள் வரை கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கச் செய்கிறது.

இத்தகைய இன துவேஷ செயல்கள் தலைத்தூக்கும் போது ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டிய ஒற்றுமைத்துறை அமைச்சும், அதன் அதிகாரிகளும் மவுனம் காத்து வருவதும், அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காததும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

சோளவியாபாரியைப் போன்ற இனதுவேஷத்தை விதைக்கும் நபர்களுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கை தேவை, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதனை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

உணர்ச்சிக்கு இடமான அரச பரிபாலனம், சமயம் மற்றும் இனம் ஆகிய 3 R விவகாரங்களை தூண்டி விட்டு, குளிர்காய முற்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது 3R சட்டம் உடனடியாக பாய வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS