பெந்தோங், பிப்.17-
விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியின் போது, போக்குவரத்தைக் கண்காணிக்க உதவிய ஆடவர் ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு உயிரிழந்தார். இதர நால்வர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் காராக்- கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் 69.2 ஆவது கிலோ மீட்டரில் பெந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த ஆடவர், பெந்தோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சைஹாம் முகமட் காஹார் தெரிவித்தார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையை விட்டு, நெடுஞ்சாலையில் உள்ள சிறு கால்வாயில் விழுந்தது. அச்சாலையைக் கடந்தவர்கள், தங்கள் காரை நிறுத்தி விட்டு உதவ முற்பட்டனர். அப்போது, ஒருவர், சாலையோரத்தில் நின்று கொண்டு, வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த கண்காணிக்க முற்பட்ட போது, காரினால் மோதப்பட்டதாக சுப்ரிண்டெண்டன் சைஹாம் குறிப்பிட்டார்.