கோலாலம்பூர், பிப்.20-
பரிந்துரைக்கப்பட்டுள்ள இனப்பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம், நாட்டில் மீண்டும் மே 13 கலவரத்திற்கு வித்திடலாம் என்று கூறியுள்ள பாஸ் கட்சியின் பெங்காலான் செப்பா எம்.பி. அக்க்கமட் மார்சுக் ஷாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டிஏபி தலைவரும், பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், இன்று நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் தொடர்பில் உரையாற்றிய அந்த பாஸ் எம்.பி. யின் பேச்சு, பல்லின சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்புணர்வையும், பகைமையையும் தூண்டி விடும் வகையில் அமைந்துள்ளது என்று லிம் குவான் எங் வாதிட்டார்.
இந்த உத்தேச சட்டம் மீதான பரிந்துரையை முன்மொழிந்த தாம், மே 13 கலவரத்தைப்பற்றி எதுவும் பேசாதப் பட்சத்தில் அந்த சட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆக்ககரமான பலாபலன்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் தாம் முன் வைத்ததாக லிம் குவான் எங் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக, சிலாங்கூர், சிப்பாங்கில் ஒரு சோள வியாபாரி சம்பந்தப்பட்ட அண்மைய சம்பவத்தை சுட்டிக் காட்டிய லிம் குவான் எங், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தீவிரவாத போக்குடையவர்கள் சம்பந்தப்பட்ட இனப் பிரச்னைகள் மற்றும் இன விவகாரங்களை கையாளுவதற்கு இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் அவசியமாகிறது என்று வலியுறுத்தினார்.
ஆனால், தம்முடைய இந்தப் பரிந்துரைப் பற்றி வாதிட்ட அந்த பாஸ் எம்.பி., அப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டால் மீண்டும் மே கலவரம் வெடிக்கும் என்ற தோரணையில் எச்சரிக்கும் தன்மையில் பேசியுள்ளார் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இனப்பாகுகளுக்கு எதிரான சட்டம், பூமிபுத்ராக்களின் உரிமைகளையும், அவர்களுக்கு, இதுநாள் வரை வழங்கப்பட்டு வரும் சலுகைகளைப் பறிப்பதற்கு ஒரு பின்வாசலாக பயன்படுத்தப்படலாம் என்று மக்களைத் தூண்டிவிடும் போக்கில் பேசியுள்ளார் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.