ஜார்ஜ்டவுன், பிப்.21-
ஜவ்வு மிட்டாய் தொண்டையில் அடைத்து பினாங்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பத்து வயது சிறுவன், நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததைத் தொடர்ந்து பினாங்கு, சுங்கை டூவா அருகில் வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஜவ்வு மிட்டாய்கள், ஆய்வுக்காக சுகாதார அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.
ஜவ்வு மிட்டாய்கள், உண்பதற்கு பாதுகாப்பானதா? என்பதை மதிப்பீடு செய்யும் பொருட்டு, அந்த மிட்டாய் விற்கப்பட்ட வளாகத்தில் உள்ள ஜவ்வு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் தெரிவித்தார்.
இதேபோன்று நாடு தழுவிய நிலையிலும் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
முகமட் ஃபாமி ஹாபிஸ் முகமட் என்ற அந்த சிறுவன், பட்டர்வொர்த்தில் உள்ள சுங்கை டூவா தேசியப் பள்ளி மாணவன் ஆவார். சம்பவத்தன்று அந்த மாணவன் வெளியே ஜவ்வு மிட்டாயை வாங்கிச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த சிறுவன் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாய் திடீரென்று தொண்டையில் அடைத்துக் கொண்டத்காகக் கூறப்படுகிறது. கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுவன், மருத்துவமனைக்குக் தூக்கிச் செல்லப்பட்டான்.
பினாங்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.