ஜகார்த்தா, பிப்.22-
இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவின் சிக்கன நடவடிக்கையைக் கண்டித்து, அவரது மாளிகையை முற்றுகையிட்டு நுாற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
ஆசிய நாடான இந்தோனேசியாவின் அதிபராக, முன்னாள் ராணுவ அதிகாரி பிரபாவோ சுபியாந்தோ கடந்த அக்டோபரில் பொறுப்பேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்த அவர், நாட்டில் நிலவும் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த மாதம் உத்தரவிட்டார்.
குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கான இலவச உணவு திட்டத்துக்கு நிதியை மாற்றிவிடும் நோக்கில், சிக்கன நடவடிக்கை தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிரபாவோ பிறப்பித்தார். அரசு ஊழியர்கள் பணிநேரங்களுக்கு முன்பாகவே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு அதிரடி மாற்றங்களால் இந்தோனேசியாவில் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அதிபருக்கு எதிராக திரண்ட போராட்டக்காரர்கள் நாடு முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று திரண்ட போராட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இருண்ட இந்தோனேசியா என்பதைக் குறிக்கும் வகையில் கறுப்பு உடை அணிந்து, கையில் தீப்பந்தங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜகார்த்தாவின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜகார்த்தாவைத் தொடர்ந்து, சுரபயாவில் கல்லுாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிக்கன நடவடிக்கை தொடர்பான உத்தரவை அதிபர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.