கிள்ளான், பிப்.22-
இன்று அதிகாலையில் கிள்ளான் மேரு சந்தை வளாகத்தில் அமலாக்க நடவடிக்கையின் போது குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதை தவிர்க்க சட்டவிரோதக் குடியேறிகள் “கொரில்லா தந்திரங்களை” பயன்படுத்தியுள்ளனர்.
அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில், சில வெளிநாட்டவர்கள் மறைவதற்கு குறுகிய வடிகால்களுக்குள் ஊர்ந்து செல்வதை குடிநுழைவு அதிகாரிகள் கண்டனர். சிலர் பிடிபடுவதைத் தவிர்க்க கூரையில் ஏறினர்.
இத்தகைய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்ததால் அதிகாரிகளை பார்த்த அடுத்த கணமே கொரில்லா நடவடிக்கைகையைக் கையாளத் தொடங்கினர் என்று குடிநுழைவுத்துறை கூறியது.
இந்த நடவடிக்கையின் போது 17 முதல் 57 வயதுக்குட்பட்ட 630 அந்நிய நாட்டவர் சோதனை செய்யப்பட்டனர். இதில் 598 பேர் கைது செய்யப்பட்டனர் என்று மலேசிய குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் ஜாப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.