ஜார்ஜ்டவுன், பிப்.22-
பினாங்கு, சுங்கை பாக்காப் – பட்டர்வொர்த் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதர,சகோதரிக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 4 ஆயிரம் ரிங்கிட் தொடக்க கட்ட நிதி உதவியாக வழங்கியுள்ளது.
பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் எம்.டர்ஷன் மற்றும் அவரின் 5 வயது சகோதரி கவர்ஜித்தாவை பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர் மற்றும் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் நேரில் சென்று பார்த்தனர்.
தீவிர சிகிச்சை பெற்று வரும் அவ்விரு உடன்பிறப்புகளும் தனி வார்ட்டில் அனுமதிக்கவும், அவர்களுக்கு குளிரூட்டி வசதி இருப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை தாம் செய்துள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
அவ்விருவருவரின் உடல் நிலையும் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் லிங்கேஸ்வரன், அவ்விரு உடன் பிறப்புகளுக்கும் ஏற்பட்ட கசப்பான சம்பவத்திலிருந்து மீளவும், அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருட்களைத் தாம் வாங்கிக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.