கோலாலம்பூர், பிப்.24-
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் குற்றத்திற்காக தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுவிக்க முடியுமா? என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் லத்திபா சவால் விடுத்துள்ளார்.
2018 ஆம்ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்த போது எதிரிகள் மற்றும் விஷமிகள் என்று கருதப்பட்ட சிலரை அவசரக் கதியில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று டத்தோஸ்ரீ அன்வார் ஏற்கனவே கூறியிருப்பது, உண்மையாக இருக்குமானால், அவர் நஜீப்பை விடுவிக்க வேண்டும் என்று உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு Straight Talk எனும் தலைப்பில் podcast பேட்டியில் லத்திபா கோயா இந்த சவாலை விடுத்துள்ளார்.
அக்காலக்கட்டத்தில் அவசர கதியில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார் என்பதை அன்வார் திட்டவட்டமாக கூறவில்லை என்பதையும் லத்திபா கூறினார்.
ஆனால், அவசரக் கதியில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் நஜீப் பலிகடாவாகி இருப்பது உண்மையாக இருக்குமானால் சிறையிலிருந்து அந்த முன்னாள் பிரதமரை அன்வார் விடுவிக்க வேண்டும் என்று லத்திபா வலியுறுத்தினார்.