நிந்தனை குற்றச்சாட்டிலிருந்து சனூசி விடுவிப்பு

ஷா ஆலாம், பிப்.24-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 16 ஆவது மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை அவமதிக்கும் வகையில் அரசியல் கூட்டத்தில் உரை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கெடா மந்திரி பெசார் டதோஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோர், விடுவிக்கப்பட்டுள்ளார்.

சனூசிக்கு எதிராக வழக்கு இல்லை என்றும், வழக்கை தொடர்வதற்கு சட்டத்துறை அலுவலகம் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் 51 வயதான சனூசியை வழக்கிலிருந்து இன்று காலையில் விடுவித்தது.

கெடா, Jeneri சட்டமன்ற உறுப்பினரான சனூசி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிலாங்கூர், கோம்பாக், கம்போங் பெண்டாஹாரா, தாமான் செலாயாங் முத்தியாராவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானையும், மாட்சிமைத் தங்கிய மாமன்னரையும் அவமதிக்கும் தன்மையிலான சொல்லாடலைப் பயன்படுத்தியதாக செலாயாங் மாஜிஸ்திரேட் நீதின்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

இவ்வழக்கு பின்னர் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தனது செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சனூசி, தன்னை மன்னித்து அருளுமாறு கடந்தாண்டு ஆட்சியாளரை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS