டக்கா, பிப்.24-
வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; சிலர் காயமடைந்தனர். வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் விமான படையின் தளம் உள்ளது. அங்கு பணியாற்றும் விமானப்படை வீரர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் சில காலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று உள்ளூர் மக்கள் கல்வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். மோதல் முற்றிய நிலையில், ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த தாக்குதலில் 30 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காக்ஸ் பஜார் துணை கமிஷனர், தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விமானப்படை தளத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளம் மீதான தாக்குதல் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என விமானப்படை தளம் தெரிவித்துள்ளது.