உத்தர பிரதேசம், பிப்.24-
கும்பாமேளா யாத்ரீக பயணத்தின் போது காணாமல் போன மலேசியப் பிரஜை , 15 நேரத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த 52 வயது தேவி ரத்னம் என்ற அந்த மலேசியப் பிரஜை, உத்தர பிரதேசம், வர்ணாசி போலீஸ் நிலையத்தினால் கண்டு பிடிக்கப்பட்டார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் தேவி ரத்னம், மலேசிய யாத்ரீக குழுவினரால் மீட்கப்பட்டார். அடுத்த வாரத்தில் நிறைவு பெறவிருக்கும் மகா கும்பமேளா யாத்ரீகர் பயணக்கு ழுவில் இடம் பெற்றிருந்த தேவி ரத்னம், கும்பமேளாவிற்கு புறப்படுவதற்காக நேற்று காலையில் வர்ணாசியில் உள்ள காசி விஸ்வரநாதர் கோவிலில் சாமி தரிசனத்தை தனது குழுவினருடன் மேற்கொண்டுள்ளார்.

கோவிலை விட்டு வெளியேறும் போது, நதிக்கரையோரத்தில் போலீசாருக்கும், அங்கு நின்றிருந்த சில கும்பலுக்கும் இடையில் நடந்த கடும் வாக்குவாதத்தின் போது, கூட்டத்தினரைக் கலைப்பதற்கு போலீசார் முற்பட்டனர்.
அப்போது தனது 18 பேர் கொண்ட குழுவினருடன் நின்றிருந்த தேவி ரத்னம், கூட்டத்தின் மத்தியில் காணாமல் போனார். நூற்றக்கணக்கானோர் நின்றிருந்த கோவில் வாசலில் தேவி ரத்னத்தை தேடும் பணி துரித வேகத்தில் முடுக்கி விடப்பட்டது.

எனினும் அவரை கண்டு பிடிக்க இயலவில்லை. பின்னர் அவர் குழுவில் இடம் பெற்றிருந்த கே. வசந்தி என்பவர் இது குறித்து அருகில் Chowk போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இத்ததகவல் எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையில் மலேசிய நேரப்படி இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் தேவி ரத்னம் கண்டு பிடிக்கப்பட்டார்.
முன்னதாக, அவர், கங்கை ஆற்றில் மூழ்கி விட்டதாக தவறான தகவல்கள் பரப்பட்டதால் உடன் சென்ற சக பயணக்குழுவினர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர்.
இதனிடைய இது குறித்து பயண ஏற்பாட்டு நிறுவனமான KPS டிரவல் ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் கே.பி. சாமியுடன் தொடர்பு கொண்ட போது, இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவில் உள்ள தங்கள் ஏஜெண்டுகள் மூலம் தேவி ரத்னத்தை தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட நிலையில் அதிகாலையில் தேவி ரத்னம் தாமே போலீஸ் நிலையத்திற்கு சென்று, உதவிக் கோரியதாக கே.பி.சாமி தெரிவித்தார்.
தேவி ரத்னத்தின் கைப்பேசி, பேருந்திலேயே விட்டு விட்டதால் அவரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கே.பி. சாமி குறிப்பிடடார்.
18 பேர் கொண்ட பயணக்குழுவினர் இன்று மதியம், கும்பமேளா யாத்ரீகப் பயணத்தை பாதுகாப்பாக தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.