இந்திய தொழில்முனைவர்களுக்கான BRIEF –i திட்டத்திற்கு மேலும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், பிப்.25-

இந்திய தொழில்முனைவோர் நிதியுதவியான Brief – i திட்டத்திற்கு Bank Rakyat மேலும் 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்ம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் அறிவித்துள்ளார்.

இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடானது, உள்ளூர் வர்த்தகர்களைக் குறிப்பாக இந்திய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களைத் தொடர்ச்சியாக ஆதரிப்பதிலும், அவர்களை ஊக்குவிப்பதிலும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள Bank Rakyat கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், இந்திய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகங்களை விரிவுப்படுத்திக் கொள்வதற்கும், முன்னேறுவதற்கும் போதுமான நிதி வளத்தைக் கொண்டு இருப்பதற்கு அவர்களின் மூலதன செலவுகளுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இந்த உதவியின் பிரதான நோக்கமானது, மேலும் அதிகமான இந்திய தொழில்முனைவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்திக் கொள்வதுடன் அவர்களின் வர்த்தகம் கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் , தொழில்நுட்பத்தின் வாயிலாக தங்கள் வணிக நடவடிக்கைகளில் புதுமையைப் புகுத்திக் கொள்வதற்கு இந்த நிதி BRIEF- i திட்டம் உதவும் என்று டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் உள்ள Bank Rakyat இரட்டைக் கோபுரத்தில் நடைபெற்ற இந்திய தொழில் முனைவர்களுக்கு Bank Rakyat-டின் BRIEF – i நிதி உதவிக்கான காசோலையை வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் BRIEF – i திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 512 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிகர்களுக்கு BRIEF – i திட்டம் மூலம் 49 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி அங்கீகரிக்கப்பட்டு, வழங்கப்பட்டு விட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.

இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவ்வாண்டு மேலும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

போக்குவரத்துச் சேவைகள், சில்லறை விற்பனை, உணவு, பானங்கள் தயாரிப்பு மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவர்கள், BRIEF – i திட்டத்தின் நிதி உதவி வாயிலாக தங்கள் வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முனைந்து இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்ற டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டர்.

BRIEF – i திட்டத்தின் வாயிலா இன்று நிதி உதவிப் பெற்றவர்கள் திசைகளுடன் தங்கள் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொண்ட போது, தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்ள இந்த நிதி பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட Bank Rakyat தலைவர் Datuk Mohd. Irwan Mohd. Mubarak கூறுகையில், BRIEF – i திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய சமுதாயத்தை சேர்ந்த குறு,சிறு மற்றும் நடுத்தர வணிகர்களிடமிருந்து மகத்தான ஆதரவை Bank Rakyat பெற்று வருவதாக குறிப்பிட்டடார்.

WATCH OUR LATEST NEWS