கோலாலம்பூர், பிப்.25-
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட விஐபிக்களில் 18 பேரை, சட்டத்துறை அலுவலகம் விடுவித்துள்ளது என்று சட்ட சீர்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 145 ஆவது பிரிவின் கீழ் சட்டத்துறைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக அதிகாரத்திற்கு ஏற்ப அந்த 18 விஐபிக்களும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற அஸாலினா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்கண்ட அரசியலமைப்புச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கைத் தொடர்வதற்கும், அதனை மீட்டுக் கொள்வதற்கும் சட்டத்துறைத் தலைவருக்கு பிரத்தியேக அதிகாரம் வழங்குகிறது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.