ஜோகூர் பாரு, பிப்.26-
நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் ஜோகூர்பாரு, ஜாலான் செரிகாலாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த Audi TT ஆடம்பர கார் ஒன்று, நான்கு கார்களை மோதித் தள்ளிவிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் அந்த ஆடம்பர கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருவதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
இந்த சம்பத்தில் உயிருடன் இழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்ற போதிலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள வாகனங்கள் கடுமையாகச் சேதமுற்றன.
அந்த ஆடம்பர கார், ஜாலான் டத்தோ சுலைமானிலிருந்து சென்று கொண்டிருந்த போது ஜாலான் ஹரிமாவிலிருந்து வந்து கொண்டிருந்த புரோட்டோன் பெர்சோனா காரை மோதித் தள்ளியதுடன் மேலும் மூன்று கார்களை மோதிக் கடும் சேதத்தை விளைவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த ஆடம்பர கார் ஓட்டுநர், விபத்துக்கு பின்னர் நிற்காமல் தப்பிவிட்டதால் அவரைத் தேடும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.