கோலாலம்பூர், பிப்.26-
அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய கொள்கைகள் குறித்த தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும், மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகள் பற்றி குறிப்பாக, இந்திய சமூகத்தினர் எதிகொள்ளும் பிரச்னைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதிலும் பெர்னாமா மற்றும் இதர மொழி ஊடகங்களைப் போலவே முக்கியப் பங்காற்றி வரும் தமிழ் மின்னில், டிஜிட்டல் ஊடகங்களை வளப்படுத்த அரசாங்கம் உதவ வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் இன்று நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
பாரம்பரியமாக இருந்து வரும் அச்சு ஊடகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் மின்னியல், டிஜிட்டல் ஊடகங்களும் மடானி அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
குறிப்பாக, நம்பிக்கை, வணக்கம் மலேசியா, திசைகள், தமிழ் லென்ஸ், தினந்தந்தி போன்ற தமிழ் மின்னியல் மற்றும் டிஜிட்டல் தமிழ் ஊடகங்கள் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆக்ககரமான பங்களிப்பை வழங்கி வருகின்றன என்று ராயர் சுட்டிக்காட்டினார்.
உதாரணத்திற்கு கோலகுபு பாரு சட்டமன்றத்திற்கு உட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த 245 முன்னாள் பாட்டாளி குடும்பங்கள் எதிர்நோக்கி வந்த வீட்டுப்பிரச்னை, அரசாங்கத்தின் கவனத்திற்கு முக்கியமாக கொண்டு வரப்பட்டன.
இதன் விளைவாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக தலையிட்டு, வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சருடன் இணைந்து அந்த பாட்டாளி மக்கள் எதிர்ர்நோக்கி வந்த 27 ஆண்டு கால பிரச்னைக்கு அண்மையில் விடியலை ஏற்படுத்தினார்.
மேரி, நைகல் கார்டனர், புக்கிட் தஹார், சுங்கை திங்கி மற்றும் மின்யாக் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 245 பாட்டாளி குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் வாயிலாக 40 மில்லியன் ரிங்கிட், சிலாங்கூர் அரசின் வாயிலாக 35 மில்லியன் ரிங்கிட் என்ற நிதி ஒதுக்கீட்டின் வழி அந்த பாட்டாளி மக்களுக்கு சொந்த வீட்டுடமைத் திட்டம் உருவாகவிருக்கிறது.
இந்திய சமூகத்தின் இத்தகைய பிரச்னைகளை வெளிகொணர்வதில் முக்கிய பங்காற்றி வரும் மேற்கண்ட தமிழ் மின்னியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு, முடிந்தால், தொடர்புத்துறை அமைச்சில் இருக்கக்கூடிய நிதி உதவித் திட்டம் அல்லது மானியம் மூலமாக நிதி உதவி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று RSN ராயர் கேட்டுக்கொண்டார்.