நோம் பேன், பிப்.27-
கம்போடியாவில் இரண்டு வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு அந்த தென்கிழக்கு ஆசிய நாட்டில் வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.
தென்கிழக்கு ப்ரே வெங் மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் நோய்வாய்ப்பட்ட கோழிகளுக்கு அருகில் விளையாடியதில் இருந்து குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை இறந்ததாக சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனைகள் உறுதிப்படுத்தப்பட்டது. அச்சிறுமி தனது வீட்டில் கோழிப்பண்ணைக்கு அருகில் தூங்கி விளையாடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. அங்கு சுமார் 15 பறவைகள் இறந்ததாகவும், மற்றவை நோய்வாய்ப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்த அமைச்சு, குழந்தையின் மரணத்திற்கு காரணமான வைரஸின் மூலத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறியது.