மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார் கைது – 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச்.01-

மலேசிய கினி இணையப் பக்கச் செய்தி நிறுவனத்தின் முதன்மை நிருபர் B. நந்தகுமார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரமால் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய குடிநுழைவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரியான டத்தோ அந்தஸ்தில் உள்ள முக்கிய பிரமுகர், பாகிஸ்தான் ஏஜண்டுடன் கூட்டாகச் சேர்ந்து சட்டவிரோத தொழிலாளர்களை இறக்குமதி செய்கிறார் என்று அண்மையில் மலேசிய கினியில் பரபரப்பான செய்தியை நிருபர் நந்தகுமார் வெளியிட்டு இருந்தார்.

அந்த செய்தி தொடர்பிலேயே நிருபர் நந்தகுமார் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் என்ற கூறப்பட்டது. ஆனால், அது உண்மை அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று விளக்கம் அளித்தார்.

பாகிஸ்தான் ஏஜெண்டுடன் கூட்டாக சேர்ந்து அந்நியத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து மலேசிய கினியில் செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கொடுக்குமாறு அந்த நிருபர், பேரம் பேசியுள்ளார்.

ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சப் பணம் பின்னர் 20 ஆயிரம் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த தொகையைக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்ட ஏஜெண்டு, பின்னர் இது குறித்து ரகசியமாக எஸ்பிஆர்எமில் புகார் செய்துள்ளார் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

அந்த நிருபர் பணத்தைப் பெறுவதற்கு எஸ்பிஆர்எம் பொறி வைத்தது. அதன்படி, ஷா ஆலாமில் உள்ள கொன்கோர்ட் ஹோட்டலில் பணத்தை ஒப்படைப்பதற்கு ஏஜெண்டு ஒப்புதல் அளித்த நிலையில், அந்த நிருபரும் அங்கு வந்துள்ளார்.

20 ஆயிரம் ரொக்கத் தொகை கைமாற்றம் செய்த போது, அவர்களுக்கு தெரியாமலேயே அங்கு பதுங்கியிருந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள், 20 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்துடன் அந்த நிருபரை கையும் களவுமாக பிடித்ததாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இன்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த நிருபர், விசாரணைக்கு ஏதுவாக 4 நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு எஸ்பிஆர்எம், நீதிமன்ற ஆணையைப் பெற்று இருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இதனிடைய தங்கள் நிருபர் நந்தகுமார் கைது செய்யப்பட்ட செய்தி, தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக மலேசிய கினி நிர்வாக இயக்குநர் RK. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS