ஜார்ஜ்டவுன், மார்ச்.02-
இன்று அதிகாலை, பினாங்கு, துன் டாக்டர் லிம் சோங் யியூ நெடுஞ்சாலையில் MPV வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். அதிகாலை 1.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்பு-மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். Toyota Innova வகை கார் ஒன்று சாலையின் ஓரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. மூன்று பெரியவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களோடு நான்கு குழந்தைகள் சொற்பக் காயங்களுடன் தப்பினர்.
சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் காலை 2.54 மணிக்கு மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.