பெட்டாலிங் ஜெயா, மார்ச்.02-
கடந்த ஆண்டு டாமன்சாராவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது, சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் சோதனை நடத்தியதாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் மூன்று அதிகாரிகள் பிற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் உடனடியாக போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முகநூலில் தீவிரமாகப் பகிரப்பட்ட காணொலி, அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், புகார் அளித்தவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.