மாலிம், மார்ச்.03-
மலாக்கா, மாலிம், தாமான் ஶ்ரீ மாங்கா, செக்ஷன் 1 இல் உள்ள ஒரு தரை வீட்டில் தனது காதலியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவலை போலீசார் நீடித்துள்ளனர்.
அந்த நபரை வரும் மார்ச் 9 ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கிரிஸ்டொப்பர் பதிட் தெரிவித்தார்.
54 வயதுடைய அந்த நபர் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்வரரி 23 ஆம் தேதி மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பகுதி நேர பாடகியான அந்த மாது பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அவர் அருகில் அந்த சந்தேகப் பேர்வழி, தனது உடலைக் கத்தியால் கீறி, ரணப்படுத்திக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்று கிரிஸ்டொப்பர் பதிட் தெரிவித்தார்.
மஸ்ஜிட் தானா, தாமான் ஸ்ரீ அமானைச் சேர்ந்த அந்த மாது, கணவர், கோலாலம்பூரில் தங்கி வேலை செய்து வந்த வேளையில் தனது காதலனின் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த மாதுவின் உடலில் 14 வெட்டுக்காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.