இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர், மார்ச்.05-

177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஒரு முக்கிய சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணை கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

எஸ்பிஆர்எமின் விசாரணையில் ஆஜராகும் அளவிற்கு இஸ்மாயில் சப்ரியின் உடல் அனுமதிக்காத நிலையில் அவர் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ரத்தக்கொதிப்பினால் அவதியுறுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை, வரும் மார்ச் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பாதுகாப்பான வீட்டில் எஸ்பிஆர்எம்மால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பணம் மற்றும் தங்க கட்டிகள் யாருக்கு சொந்தமானவை, அந்த வீட்டை பாதுகாப்பதற்கு இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் உதவியாளர்கள் ஏன் நியமிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பான இரண்டு முக்கிய கேள்விகளுக்கு இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் மிக முக்கியம் என்ற எஸ்பிஆர்எம் கருதுகிறது.

இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS