டிஏபியின் அடுத்த தலைவராக சோவ் கோன் யோவை நியமிக்க அழுத்தம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.05-

இம்மாதம் மத்திய பகுதியில் நடைபெறவிருக்கும் டிஏபியின் உயர் மட்டப் பதவிகளுக்கான மத்திய செயலவைத் தேர்தலில் கட்சியின் நடப்புத் தலைவர் லிம் குவான் எங்கிற்கு பதிலாக பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ், கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில தரப்பினர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

டிஏபியின் உதவித் தலைவராக இருக்கும் சோவ் கோன் யோவ், கட்சியின் மத்திய செயலவைக்குப் போட்டியிடப் போவதாக கடந்த மாதம் அறிவித்த போது, அவரை கட்சியின் உயர் மட்டப் பதவிக்கு கொண்டு வருவதற்கு வியூகம் வகுக்கப்படுகிறது என்று கட்சியில் பரவலாக பேசப்பட்டது.

எனினும் இம்முறை கட்சியின் தலைவர் பதவிக்கு சோவ் கோன் யோவ் போட்டியிடுவாரோயால் அவருக்கு கட்சியில் பலத்த ஆதரவு உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியத் தவைர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் டிஏபியின் அதிகாரமிக்க பதவியாக இருக்கும் பொதுச் செயலாளர் பதவியை அந்தோணி லோக் தற்காத்துக் கொள்வார்.

அந்தோணி லோக்கிற்கும், சோவ் கோன் யோவிற்கும் இடையில் இணைந்து பணியாற்றுவதற்கு நல்லுறவு இருப்பதால் டிஏபியின் புதிய தலைவராக சோவ் கோன் யோவ் தேர்வு செய்யப்பட சாத்தியம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS