தோக்யோ, மார்ச். 05
ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு வார காலமாக எரியும் காட்டுத் தீயை அணைக்க 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். உலக நாடுகளில் காட்டுத்தீ மோசமான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயை நமக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் காட்டுத் தீ பரவி வருகிறது. ஒபுனாட்டோ காட்டு பகுதியில் 2100க்கும் அதிகமான ஹெக்டர் பரப்பளவில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. காட்டுத் தீயால் ஏராளமான வனப்பரப்பு எரிந்து சாம்பலான நிலையில், 80க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. 84 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. 4,000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
2000க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. 16க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் நீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.