கோலாலம்பூர், மார்ச்.05-
தேசிய INFLUENZA நோய்த் தடுப்புத் திட்டம், தற்போது அதன் ஆக்கப்பூர்வமான செயல்பாடு, பாதிக்கப்பட்ட நிலையில் குறிப்பிடத்தக்க பலவீனங்களை எதிர்கொண்டுள்ளது என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய INFLUENZA நோய்த் தடுப்புத் திட்டம், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுடன் தொடர்புடைய நோய்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இந்தத் துறையிலிருந்து வரும் கருத்துகளை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், தகுதியற்ற நபர்களால் MySejahtera முறை சுரண்டப்படுவதைக் காட்டுகின்றன என்று மேலவையில் டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
60 வயதுக்குட்பட்டவர்கள் இன்னமும் MySejahtera செயலியில் பதிவு செய்து கொண்டு, அரசு கிளினிக்குகளில் தடுப்பூசிகளைக் கோரலாம்.
ஆனால், இந்த தடுப்பூசித் திட்டத்தில், தாங்கள் தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் தவறான தகவல்களை அறிவிக்கும் உப நோய்கள் இல்லாத மூத்த குடிமக்களும் இருக்கவே செய்கின்றனர்.
இதன் விளைவாக, தடுப்பூசி உண்மையில் தேவைப்படும் உயர் ஆபத்துள்ள தரப்பினர், இந்த தடுப்பூசித் திட்டத்திலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
MySejahtera-வின் பதிவுகள், தானியங்கி முறையில் தணிக்கை செய்யப்படும் முறையின் இயலாமையினால், மருத்துவமனைகளில் குழப்ப நிலை ஏற்படுகிறது.
இதனால் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தகுதி இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தும் நோயாளிகளைச் சமாளிக்க அவர்கள் தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.