ஆயர் கேரோ, மார்ச்.07-
பகுதி நேர பாடகியும், தனது காதலியுமான 52 வயது மாதுவைக் கொலை செய்ததாக நபர் ஒருவர், மலாக்கா, ஆயர் கேரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
54 வயது ஹோங் யியூ பெங் என்ற ஒரு வேலையற்றவரான அந்த நபர், மாஜிஸ்திரேட் நுர் அஃபிகா ராதியா ஸைனுரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் மலாக்கா தெங்கா, தாமான் ஶ்ரீ மாங்கா செக்ஷன் 1, ஜாலான் ஶ்ரீ மங்கா 1/8 இல் உள்ள ஒரு வீட்டில் தனது காதலியான லிங் லூ செங் என்பவரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றதாக அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. எனவே அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.