பெட்டாலிங் ஜெயா, மார்ச்.07-
இந்து மதம் தொடர்பாக தம்முடன் பொது விவாதம் நடத்துவதற்கு தயாரா? என்று மஇகா தேசிய துணைத் தவைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் விடுத்த சவாலை சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி விநாத் காளிமுத்து ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதன்படி இருவருக்கும் இடையிலான பொது விவாதம் மலேசிய தமிழ்மொழி மன்றம் ஏற்பாட்டில் வரும் மார்ச் 23 ஆம் தேதி நடத்தப்படுவதற்கு களம் அமைக்கப்படவிருக்கிறது.
தைப்பூசக் காவடியாட்டத்தை கொச்சைப்படுத்தி, ஏரா எஃப்எம் வானொலி நிலையத்தைச் சேர்ந்த மூன்று அறிவிப்பார்களின் சர்ச்சைக்குரிய காணொளியைத் தொடர்ந்து, நேர்த்திக் கடன் செலுத்தும் இந்துக்களை சாடி, அவமதிக்கும் கருத்துகளை ஜம்ரி விநோத் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்துக்கள், நேர்த்திக்கடன் என்ற பெயரில் குடிப்போதையில் தள்ளாடுகின்றனர் என்றும் கிலி பிடித்தவர்களைப் போல ஆடுகின்றனர் என்றும் சினமூட்டும் கருத்துகளை ஜம்ரி விநோத் தனது முகநூலில் பதிவேற்றம் செய்து இருந்தார்.
இந்து மதத்தின் மகத்துவத்தை உணராமல் அதனை தொடர்ந்து இடித்துரைத்து வரும் ஜம்ரி விநோத் போன்ற நபர்கள், இந்துத்துவத்தின் பெருமைகள் குறித்து தம்முடன் பொது விவாதம் நடத்த தயாரா? என்று டத்தோஸ்ரீ சரவணன் நேற்று சவால் விடுத்து இருந்தார்.
முன்னாள் மனித வள அமைச்சரின் அந்த சவாலைத் தாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும், இந்து மதம் குறித்து தமிழில் விவாதம் செய்வதாகவும் ஜம்ரி விநோத், நேற்றிரவு தமது முகநூலில் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த பொது விவாதத்தை யார் ஏற்பாடு செய்கிறார்கள், எந்த இடத்தில், என்ன தலைப்பில் என்று ஜம்ரி விநோத் வினவியுள்ளார்.