கோலாலம்பூர், மார்ச்.07-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது நடத்தப்படும் விசாரணை முறையாக நடக்க வழிவிடப்பட வேண்டும். அதுவரை அமைதி காக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் இவ்விவகாரத்தில் விசாரணை நடப்பதற்கு முன்னதாகவே நாம் எந்தவொரு முடிவுக்கும் வந்து விடக்கூடாது. முதலில் விசாரணையை அனுமதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார் .
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் மேற்கொண்ட சோதனையில் 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும், இன்னும் சில விலை உயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டு இருப்பது குறித்து கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்லை. இப்போதுதான் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அவசரப்பட்டு எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைத்து விடக்கூடாது. யாரையும் முன்கூட்டியே தண்டித்து விடக்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.