ஆமதாபாத், மார்ச்.07-
நாளை மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் நிகழ்வில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்விற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் பாதுகாப்பை பெண் போலீசார் உறுதி செய்வார்கள். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.