கோலாலம்பூர், மார்ச்.07-
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் இன மற்றும் மத சர்ச்சைத் தூண்டுதல் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
இன அல்லது மதப் பிரச்சினைகளைப் பயன்படுத்தித் தூண்டிவிட முயற்சியில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராக சமரசமின்றி அமலாக்க தரப்பினரும், பாதுகாப்பு ஏஜென்சிகளும் விரைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளதாக பாஃமி பாஃட்சீல் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் புரிதலையும் மரியாதையையும் வளர்ப்பதன் மூலம் சமூகத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும் என்பதையும் பிரதமர் நினைவுறுத்தியிருப்பதாக அவர் விளக்கினார்.
மக்களின் நல்வாழ்வுக்காக நாட்டின் சட்டத் திட்டங்களை மதித்து நடக்கும்படி பிரதமர் வலியுறுத்தியிருப்பதையும் பாஃமி பாஃட்சீல் ஓர் அறிக்கையின் வாயிலாக சுட்டிக் காட்டியுள்ளார்.