கோலாலம்பூர், மார்ச்.07-
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையை இரண்டு முறை ஒத்தி வைத்துள்ள முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் மருத்துவரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இன்று சந்தித்தனர்.
சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இஸ்மாயில் சப்ரியின் உடல் நிலையின் உண்மை நிலவரத்தைக் கண்டறிவதற்கு அவரின் மருத்துவருடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சந்திப்பு நடத்தினர்.
ரத்தக் கொதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படும் இஸ்மாயில் சப்ரி, இன்று நடைபெறவிருந்த விசாரணையில் கலந்து கொள்வதிலிருந்து வரும் மார்ச் 12 ஆம் தேதி வரையில் மருத்துவ விடுப்பு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த ஒன்பதாவது முன்னாள் பிரதமரின் விசாரணை, வரும் மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.