கோலாலம்பூர், மார்ச்.08-
மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH370, விமானம், காணாமல் போய் இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன.
11 ஆண்டுகள் கடந்தாலும், நம்பகமான தடயங்களின் அடிப்படையில் MH370 விமானத் தேடுதலைத் தொடரவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பதில்களை வழங்கவும் மலேசியா தனது உறுதியான நிலைப்பாட்டை இன்று மீண்டும் உறுதிச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு இணங்க, MH370 விமானத்தைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சி தொடரப்பட வேண்டும்.
அதன்படி MH370 விமானத் தேடுதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு முன்வந்துள்ள பிரிட்டனைத் தளமாகக் கொண்ட Ocean Infinity நிறுவனம் வழங்கிய பரிந்துரைக்கு மலேசிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய தேடுதல் பகுதி, இந்தியப் பெருங்கடலில் தெற்கை நோக்கி 15 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாகும்.
Ocean Infinity நிறுவனம், மேற்கொள்ளும் இந்த தேடுதல் நடவடிக்கையில் எதிர்பார்த்தப்படி விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் எந்தவொரு செலவுத் தொகையையும் மலேசியா ஏற்க வேண்டிய அவசியம் இராது.
காரணம், விமானத்தை கண்டு பிடித்தால் மட்டுமே அதற்கான செலவுத் தொகையை மலேசியா ஏற்க முடியும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே Ocean Infinity நிறுவனத்தின் இந்த புதிய தேடுதல் நடவடிக்கைக்கு மலேசியா அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் MH370 காாணமல் போன கடைசிப் புள்ளியை அடிப்படையாகக் கொண்டு, புதிய பகுதியான தெற்கை நோக்கி, விமானத்தைத் தேடும் நடவடிக்கையில் தனது கடலாய்வு நடவடிக்கையை Ocean Infinity மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி 227 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகள் என 239 பேருடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட MH 370 விமானம் காணாமல் போனது, உலக நாடுகள் மத்தியில் இன்னமும் புரியாதப் புதிராக இருந்து வருகிறது.