கோலாலம்பூர், மார்ச்.08-
நாடு முழுவதும் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைச் சிறுமைப்படுத்தியது தொடர்பில் அரச மலேசிய காவல் படை இதுவரை 216 புகார்களைப் பெற்றுள்ளது. அவற்றில் 150 புகார்கள் போதகர் ஒருவருக்கு எதிரான புகார்கள். 73 வானொலி நிலையமொன்றின் அறிவிப்பாளர்களை உட்படுத்தியதாகும். மேலும் 38 புகார்கள் இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்தியும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வெளியிடப்பட்ட இரு வெவ்வேறு காணொளிகளை வெளியிட்ட சந்தேக நபர் சம்பந்தப்பட்டது என தேசிய காவல் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
ஆகக் கடைசியாக சமூக வலைத்தளத்தில் இந்து சமயத்தைச் சிறுமைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் போதகர் ஒருவர் வெளியிட்ட கருத்து குறித்து ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் 48 வயது நபரிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. அந்த போதகர் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் மலாய் வானொலி நிலையமான ஏரா எப்ஃஎம் அறிவிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட சம்பவத்திற்கும் 2018 ஆம் ஆண்டு சிலாங்கூர், Seafield கோவிலில் நிகழ்ந்த கலவரத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்திற்கும் உள்ள வேறுபாறு குறித்து கருத்துரைத்ததாக புகார்தாரர் கூறியுள்ளார்.
அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட போதகரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் முன் விசாரணை அறிக்கை தயார்படுத்தப்படுவதாகவும் ரஸாருடின் கூறினார்.