சிரம்பான், மார்ச்.12-
ஜசெக, ஒரு பல்லின சார்ந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியில் இந்திய சமுதாயத்தின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருப்பதற்கு தம்மால் ஓர் உறவுப்பாலமாக இருக்க முடியும் என்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடவிருக்கும் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் ஜசெக தலைவரும், கட்சியின் பொதுச் செயலாளருமான அந்தோணி லோக்கை தமது அரசியல் குருவாக ஏற்று, கடந்த நான்கு முறை, தம்பின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெப்பா சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொண்டு வரும் வீரப்பன், முதல் முறையாக ஜசெக.வின் உயர் மட்டப் பதவியான மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் ஜசெக.வில் ஓர் உறுப்பினராக சேர்ந்த வீரப்பன், இதுவரையில் நெகிரி செம்பிலான் மாநில அளவில் மட்டுமே பொறுப்பில் இருந்து வருகிறார். மாநிலத்திற்கு அப்பாற்பட்ட நிலையில், கட்சியின் மத்திய அளவில் எடுக்கக்கூடிய முடிவுகளில் தம்முடைய பங்கேற்பும், தனது குரலும் ஒலிக்க வேண்டுமானால், மத்திய செயற்குழுவில் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை வீரப்பன் வலியுறுத்தினார்.
மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தால் மட்டுமே ஜசெக.வில் உயர் மட்ட அளவில் பேசக்கூடிய விவகாரங்கள் மற்றும் விவாதங்களில் தாமும் கலந்து கொண்டு விவாதிக்க முடியும்.
குறிப்பாக, கட்சியில் இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரங்களைப் பேசுவதற்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முன்னெடுப்பதற்கும் இந்தியர்களின் பிரதிநிதிகள் மத்திய செயலவையில் இடம் பெற்று இருப்பது அவசியமாகும்.
எனவே தனது குடும்ப பின்னணியானது, பெல்டா நிலக்குடியேற்றத்திலிருந்து தொடங்கியதால் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகளையும், தேவைகளையும் நன்கு உணர்ந்துள்ளதாக தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான 50 வயது வீரப்பன் கூறுகிறார்.
சமுதாயத்திற்கு மேலும் ஆக்கப்பூர்வமான சேவையை வழங்குவதற்கு மத்திய செயலவை உறுப்பினர் பதவி ஒரு முக்கிய சாதனமாக விளங்குவதால் கட்சித் தேர்தலில் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு கட்சிப் பேராளர்களை வீரப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கிட்டத்தட்ட 70 பேர் போட்டியிடுகின்றனர். இதில் வீரப்பனின் வேட்பாளர் எண் 62 ஆகும்.