நராதிவாட், மார்ச்.13-
சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 17 நபர்களை தாய்லாந்து போலீசார் தேடி வருகின்றனர். இரு பாதுகாப்பு தன்னார்வ உறுப்பினர்கள் பலியான தாக்குதலில் ஈடுபட்ட 17 நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
“சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், மார்ச் 8 ஆம் தேதி நடந்த தாக்குதலில் மொத்தம் 17 நபர்கள் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் கண்டறிந்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் போலீசார் கண்டுபிடித்தனர். சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரை அடையாளம் காண விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் அனைவரும் ஏற்கனவே குற்றப் பதிவுகளைக் கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கு கைது ஆணைகள் உள்ளதால் போலீசாரால் தேடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்காக பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, சந்தேகத்திற்குரிய அனைவரையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை காவல்துறை தீவிரப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை, நராதிவாட் மற்றும் பட்டானி மாவட்டங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.