ஷா ஆலாம், மார்ச்.14-
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் ஏஜெண்டான பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மலேசிய கினி முதன்மை நிருபர் B. நந்தகுமார், ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த பாகிஸ்தான் ஆடவரின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து மலேசிய கினியில் செய்தி வெளியிடாமல் இருப்பதற்கு கைமாறாக, நந்தகுமார், 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிபதி டத்தோ முகமட் நாசீர் நொர்டின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 42 வயது நந்தகுமார், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, பின்னிரவு 1.45 மணியளவில் ஷா ஆலாமில் உள்ள கொன்கோர்ட் ஹோட்டலில் ஒரு பாகிஸ்தான் பிரஜையான முகமட் ஸாஹிட் என்பவரிடமிருந்து கையூட்டாக பணத் தொகையைப் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் வாங்கிய லஞ்சப் பணத்திற்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் நந்தகுமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து நந்தகுமார் விசாரணை கோரினார். இதனைத் தொடர்ந்து அவரை ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி நாசீர் நொர்டின் அனுமதி அளித்தார்.
தவிர, இவ்வழக்கு விசாரணை முடியும் வரையில் நந்தகுமாரின் அனைத்துலக கடப்பிதழைப் பிடித்தம் செய்வதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நந்தகுமார் சார்பில் வழக்கறிஞர் P. புருஷோத்மன் ஆஜராகிய நிலையில் பிராசிகியூஷன் சார்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலிஸ் இஸாத்தி அஸுரின் முகமட் ருஸ்டி ஆஜராகினார்.