சிப்பாங், மார்ச்.14-
கொள்ளையர்கள் என்று நம்பப்படும் 3 அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இன்று அதிகாலையில் சிலாங்கூர், சிப்பாங், டேசா விஸ்தாவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த அந்த மூன்று கொள்ளையர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் பாஃடில் மர்சுஸ் தெரிவித்தார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆயுதமேந்திய நிலையில் குறைந்த பட்சம் 17 கொள்ளைச் சம்பவங்களுக்கு இந்த கொள்ளையர்கள் காரணமானவர்கள் என்று நம்பப்படுவதாக பாஃடில் மர்சுஸ் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட கொள்ளையர்களின் இலக்குரிய வீட்டில் நுழைந்த போது, ஆபத்து, அவசர அலார சத்தம் ஒலிக்கத் தொடங்கிய போது , வீட்டின் உரிமையாளர் உஷாரானார். இது குறித்து தகவல் கிடைத்து போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்த போது, அந்த கொள்ளைக் கும்பல், போலீசாரைப் பார்த்ததும் பாராங்கினால் தாக்க முற்பட்டனர்.
அப்போது போலீசார் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலில், அந்த மூன்று கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக பாஃடில் மர்சுஸ் தெரிவித்தார்.
இந்த கொள்ளைக் கும்பலில் மொத்தம் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சங்கிலித் தொடரைப் போன்று இக்கும்பல் நடத்திய கொள்ளைச் சம்பவங்களினால் மொத்தம் பத்து லட்சம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஃடில் மர்சுஸ் குறிப்பிட்டார்.