கோலாலம்பூர், மார்ச்.14-
அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் மலேசியாவின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அப்போட்டியில் ஆகக் கடைசியாக மகளிர் இரட்டையர்களான பேர்லி டான்-எம் தீனாவும், கலப்பு இரட்டையர்களான கோ சூன் ஹுவாட்- ஷெவோன் லாய் ஜெமி எஞ்சியியிருந்தனர். காலிறுதியில் பேர்லி-தினா, ஜப்பானிய ஜோடியான சிஹாரு ஷிடா-நமி மாட்சுயாமாவிடம் 17-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டனர்.
தோல்வியடைந்தாலும் அவ்விருவரையும் பாராட்டியே ஆக வேண்டும். நேற்று இரண்டாவது சுற்றின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் பேர்லி பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரும் தீனாவும் இறுதி வரை கடுமையாகப் போராடினர்.
இதற்கிடையில், சீன ஜோடியான ஜியாங் ஜெங் பேங்-ஹுவாங் டோங் பிங்கைச் சந்தித்த நாட்டின் சூன் ஹுவாட்-ஷெவோனுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. அவர்கள் முதல் செட்டை 21-18 என வென்று அசத்தினர். எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் 8-21, 10-21 என்ற கணக்கில் வீழ்ந்தனர்.
இந்த இரண்டு ஜோடிகளின் தோல்வி இவ்வாண்டு மிகவும் பிரசித்தி பெற்ற அப்போட்டியில் மலேசிய பிரதிநிதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததைக் குறிக்கிறது.