புக்கிட் அமான் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் அருண் துரைசாமி

கோலாலம்பூர், மார்ச்.14-

இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகரான ஜம்ரி விநோத் காளிமுத்துவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வீதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி, புக்கிட் அமான் போலீஸ் தலைமையக விசாரணைக்கு இன்று அழைக்கப்பட்டார்.

ஜம்ரி விநோத் தொடர்பாக தாம் வெளியிட்ட ஒரு காணொளி குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தம்மிடம் விசாரணை நடத்தியதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையக கட்டடத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் மலேசிய இந்து ஆகம அணி இயக்கத்தின் தலைவருமான அருண் துரைசாமி இதனைத் தெரிவித்தார்.

எனினும் வீதி ஆர்ப்பாட்டத்திற்கு இந்துக்களுக்கு தாம் அழைப்பு விடுத்தது, நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமையை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்ட அறைகூவலாகும் என்று அதிகாரிகளுக்கு தாம் விளக்கம் அளித்ததாக அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

மலேசியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சமய சுதந்திரத்தைப் பேணவும், பாதுகாக்கவும் அரசியலமைப்புச் சட்டம் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

அந்த சமய சுதந்திரத்திற்கு யார் சவால் விட்டாலும் அது குறித்து விவாதிப்பதற்கும், அமைதியான முறையில் ஆட்சேபக் கூட்டம் நடத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறது என்பதைத் தாம் தெளிவாக விளக்கியிருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS