கோலாலம்பூர், மார்ச்.15-
மலாய்க்கார பூமிபுத்ராக்கள் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி, செல்வத்தைக் குவிக்க முயற்சிக்கும் தரப்பினருக்கு எதிராக முழு வீச்சில் போராடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஜ்லிஸ் அமானா ரஹ்யாட் எனப்படும் MARA-வின் 59 ஆம் ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார், இது போன்ற துரோகச் செயல்களால், பூமிபுத்ரா சமூகத்திற்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள், சமூகத்திற்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தி விடும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட முறையில் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு யாரும், மலாய்க்கார பூமிபுத்ரா என்ற அடையாளத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
சுய லாபத்தை ஈட்டுவதற்காக மலாய்க்கார பூமிபுத்ரா பெயரைப் பயன்படுத்தும் தரப்பினரின் செயல்கள் முற்றாக வேரறுக்கப்படும்.
வெளிப்படையிலான நிர்வாக முறை இல்லாததால் சமூகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பற்றி அதிகமாக பேசுறோம். ஆனால், சமூகத்திற்குச் சேர வேண்டிய நிதி என்பது கொள்கை ரீதியாக ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாராவை நிர்வகித்து வரும் புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, மாரா தலைவர் அஷ்ராப்ஃ வாஜ்டி டுசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.