ஜெலெபு, மார்ச்.15-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கி வந்த ஆதரவை அம்னோவைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் மீட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் தகவலை ஜெலெபு எம்.பி. ஜலாலுடின் அலியாஸ் வன்மையாக மறுத்தார்.
அப்படி எதுவும் நடக்கவில்லை, அந்த தகவலில் உண்மையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களாக இத்தகைய தகவல், சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அம்னோவைச் சேர்ந்த எம்.பி.க்கள், தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டால் அல்லது வேறு கட்சியில் சேர்ந்தால் 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைக் கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பொதுத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.