நாளை நடைபெறுகிறது ஜசெக தேர்தல் – லிம் கிட் சியாங்கின் ஆதிக்கத்தை உடைக்க வியூகமா? அந்தோணி லோக்- கா? ….. லிம் குவான் எங்-கா?

கோலாலம்பூர், மார்ச்.15-

ஜசெக வரலாற்றில் இதுவரை கண்டிராத கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவிற்கான மிக பரபரப்பான தேர்தல், நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷா ஆலாம், IDCC மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஜசெக.வின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலுடன் கூடிய இந்த 18 ஆவது பேராளர் மாநாட்டை பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவிருக்கிறார்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் 1,650 கிளைகளைப் பிரதிநிதித்து 4,203 பேராளர்கள் கலந்து கொள்வதற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவிற்கான 30 இடங்களுக்கு மொத்தம் 70 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் கட்சியின் நடப்புத் தலைவர் லிம் குவான் தலைமையிலான அணியினருக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கும் இடையிலான பலப்பரீட்சையாகப் பார்க்கப்படுகிறது.

தனது தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொள்வதற்கு லிம் குவான் எங், மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதைப் போன்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கும் தனது பொதுச் செயலாளர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

லிம் குவான் எங் அணியில் கட்சியின் துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, ராம் கர்ப்பால் சிங், திரேசா கொக், கணபதிராவ், லிம் ஹுய் யிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேவேளையில் அந்தோணி லோக் தலைமையிலான அணியில் பினாங்கு மாநிலத் தலைவரும், மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம், பேரா மாநிலத் தலைவரும், வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் உட்பட முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் மத்தியில் அணியில்லை என்று பகிரங்கமாகக் கூறப்பட்டாலும், இரண்டு அணிகள் களத்தில் இறங்கியுள்ளன என்பதை பேராளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிட வேண்டாம் என்று லிம் குவான் எங்கிற்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாக பினாங்கு முன்னாள் முதலமைச்சரான லிம் குவான் எங் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

எனினும் லிம் குவான், மீண்டும் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதற்கு பேராளர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஜசெக.வை கோலோச்சிய கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவே அந்தோணி லோக் தலைமையில் இந்த பலப்பரீட்சை நடக்கிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தாம் வெற்றி பெற்றால், ஜசெக.வின் தலைமைத்துவதில் என்றும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய சீரமைப்பு செய்யப்படும் என்று அந்தோணி லோக் சூசகமாகக் கோடி காட்டியுள்ளார்.

லிம் குவான் எங்கிற்கு பதிலாக பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவை ஜசெக.வின் புதியத் தலைவராகக் கொண்டு வருவதற்கு காய் நகர்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

மலேசிய அரசியல் வரலாற்றைச் செதுக்கியவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங்கின் ஆதிக்கம், இந்த தேர்தலில் முடிவு கட்டப்படும் நிலை ஏற்படுமானால், 60 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஜசெக.வில் மிகப் பெரிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று பதிவு செய்யப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தனது புதல்வர் லிம் குவான் எங்கின் அரசியல் பிரவேசத்திற்காக லிம் கிட் சியாங், ஜசெக.வில் நீண்ட காலத் தலைவரான சிரம்பான் முன்னாள் எம்.பி. சென் மான் ஹின்னை எவ்வாறு ஓரம் கட்டினாரோ, அந்த சென் மான் ஹின்னை அரசியல் குருவாக ஏற்று, அவரிடம் அரசியல் பாடம் கற்று, சிரம்பான் எம்.பி.யாகவும், ஜசெக.வின் உயர் மட்டத் தலைவராகவும் இன்று உயர்ந்துள்ள அந்தோணி லோக்கினால் லிம் கிட் சியாங்கின் ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்படலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS