தேசிய அரசியலில் முன்னுரிமைப் பெற வலுவான பிரதிநிதித்துவம் தேவை

ஜார்ஜ்டவுன், மார்ச்.16-

டிஏபி மத்திய உயர்மட்டக் குழு CEC தேர்தலில், பினாங்கு மாநிலப் பேராளர்கள் தங்கள் மாநிலத்தின் நலன்கள் தேசிய அரசியலில் முன்னுரிமைப் பெற வலுவான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தினர். டிஏபியின் எழுச்சியில் பினாங்கு முக்கியப் பங்கு வகித்ததால், அது தொடர்ந்து முக்கிய பங்காற்ற வேண்டும் என்று பிரதிநிதிகள் தெரிவித்தனர். சமீபத்திய ஆண்டுகளில் பினாங்கு தலைவர்களின் செல்வாக்கு குறைந்து, சிலாங்கூர், பேரா மாநிலத் தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்.

மூத்த தலைவர்கள் விலகினாலும், மத்திய உயர்மட்டக் குழுவில் தனது நிலையை பினாங்கு தக்கவைக்கும் என்றார் டிஏபி கட்சியின் பினாங்கு இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் விஜய் பிள்ளை. சோவ் கோன் யோவ் , ஸ்டீவன் சிம் போன்ற தலைவர்கள் போட்டியிடுவதால், பினாங்கு டிஏபி பயணிக்கும் திசையைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று அவர் கூறினார். CEC இல் பிரதிநிதித்துவம் மாநிலத்திற்குப் பயனளிக்கும். பினாங்கு டிஏபியால் ஆளப்படுவதால், மாநிலத் தலைவர்கள் தேசிய கொள்கைகளில் வலுவான குரலைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் பினாங்கு இளைஞர் பிரிவின் செயலவை உறுப்பினர் பாஃரிட் மௌலுட். CEC இல் அதிகமான பினாங்கு தலைவர்கள் இருப்பது டிஏபி செல்வாக்கை, குறிப்பாக மலாய் பெரும்பான்மை பகுதிகளில், விரிவுபடுத்த உதவும் என்று பாஃரிட் கூறினார். சோவுக்கு முக்கிய தலைமைப் பதவி வழங்கப்பட்டால், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு கூட்டரசின் நிதியைப் பெறுவதன் மூலம் பினாங்கு வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS