வாஷிங்டன், மார்ச்.16-
அமெரிக்காவில் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் புரட்டிப் போட்ட சூறாவளி, புழுதிப் புயல், காட்டுத் தீ காரணமாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப் புயல், காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மிசோரி, அர்கன்சாஸ் மற்றும் கன்சாஸ் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. மிசோரியில், இரவு முழுவதும் சூறாவளி தாக்கி, வீடுகளை இடித்து தரைமட்டமாகியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையில், டெக்சாஸில், புழுதிப் புயலால் ஏற்பட்ட கார் விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். புயல்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மேலும் பேரழிவை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். புயல் அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் தள்ளி உள்ளது. இதுவரை குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.