பெங்காலான் ஹூலு, மார்ச்.16-
2025-ஆம் ஆண்டில் இருந்து sekolah berasrama penuh எனப்படும் முழு உறைவிடப் பள்ளிகளில் 70 விழுக்காடு மாணவர்கள் STEM என்கிற அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் முன்வைத்த இந்தத் திட்டம், கல்வி அமைச்சு தற்போது செயல்படுத்தி வரும் கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளது. மேலும், இப்பள்ளிகளில் STEM பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தூய அறிவியல் பிரிவுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். இது STEM பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். முழு உறைவிடப் பள்ளிகள் STEM பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடெக் கூறியுள்ளார்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் STEM கலாச்சாரத்தை வலுப்படுத்த அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சு செயல்பட்டு வருகிறது. முழு உறைவிடப் பள்ளிகள் மட்டும் இன்றி, மாரா இளநிலை அறிவியல் கல்லூரியும் கல்வி அமைச்சின் முக்கிய கவனத்தில் இருக்கின்றன. இப்பள்ளிகளில் 98 விழுக்காடு மாணவர்கள் அறிவியல் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு விழுக்காடு மட்டுமே கலைப் பிரிவை தேர்வு செய்துள்ளனர். உறைவிடப் பள்ளிகள் முழு அறிவியல் பிரிவுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக மறுசீரமைப்பு செய்யப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.