பாகான் டத்தோ, மார்ச்.16-
பேரா மாநிலத்தில் 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கெத்தாமின், ஷாபு வகை போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் சட்டத்திற்குப் புறம்பான ஆய்வுக் கூடத்தை அரச மலேசியக் காவல் படையின் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத் துறை கண்டுபிடித்தது. பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 40 வயதுடைய 3 இந்திய ஆண்கள் கைது செய்யப்பட்டனர். உலு பெர்னாம், செந்தூல், பத்துமலை ஆகியப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தூள் வகையிலான கெத்தாமின், திரவ நிலையிலான கெத்தாமின், ஷாபு, போதைப்பொருள் உற்பத்தி செய்யும் கருவிகள், இதர இரசாயன பொருட்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத் துறையின் இடைக்கால இயக்குநர் டிசிபி மாட் சைனி @ முகமட் சலாஹுடின் பின் சே அலி தகவல் வெளியிட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 1.61 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 59 ஆயிரத்து 100 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் குழு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், தொலைதூர பகுதிகளில் உள்ள வீடுகளை போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுக் கூடமாக மாற்றுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.