ஷா ஆலாம், மார்ச்.16-
பேரா, ஆயர் கூனிங் மாநில சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு உதவ டிஏபி கட்சி தனது இயந்திரத்தை இயக்கும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். மத்திய அரசை அமைக்கும் எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் இதுபோன்ற நடைமுறைகள் வழக்கமாகிவிட்டன என்று அவர் மேலும் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் சம்பந்தப்பட்ட எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் உதவுவது வழக்கம். இதற்கு முன் கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் அவர்கள் தங்களுக்கு உதவியது போலவே, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியிலும் தாங்கள் நிச்சயமாக உதவுவதாக இன்று நடைபெற்ற டிஏபி-யின் 18வது மாநாட்டில் அவர் கூறினார்.
மேலும், ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் ஏப்ரல் 5 அல்லது 6 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், வாக்காளர்களுக்கு முன்னதாகத் தெரியப்படுத்தவும் இஃது உதவும். வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான இஷ்சாம் ஷாருடின் பிப்ரவரி 22 ஆம் தேதி காலமானதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.