ஷா ஆலம், மார்ச்.17-
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜசெக. மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் முன்பு அறிவிக்கப்பட்டதைத் போல கட்சியில் இன்று எந்த சீரமைப்பும் இல்லையென்று நகைச்சுவை இழையோட அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
ஜசெக.வின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அந்தோணி லோக்கிற்கு உதவியாக மூன்று துணை பொதுச் செயலாளர்களாக பினாங்கு மாநில ஜசெக தலைவரும், மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம், இளைஞர், விளையாட்டுத்துறை அ மைச்சர் ஹான்னா யோ, புக்கிட் கெலுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
30 மத்திய நிர்வாக செயற்குழு உறுப்பினர்களும் கட்சியின் புதிய தலைவராக கோபிந்த் சிங் டியோவை தேர்வு செய்துள்ளனர். ஜசெக.வின் தலைவராக இருந்த காலஞ்சென்ற கர்ப்பால் சிங் வகித்து வந்த தலைவர் பதவி, தற்போது அவரின் மகன் கோபிந்த் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நிர்வாக மன்ற உறுப்பினராக இருந்த கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ், RSN ராயர் ஆகியோர் தோல்விக் கண்டனர்.
உதவித் தலைவரும், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான திரேசா கொக், மற்றும் லிம் கிட் சியாங்கின் புதல்வியும், துணை நிதி அமைச்சருமான லிம் ஹுய் யிங் தோல்விக் கண்டனர்.
கட்சியின் நான்கு உதவித் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈப்போ பாாட் எம்.பி. எம். குலசேகரன் இடம் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் அருண்குமார் ஜம்புலிங்கம் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
கட்சித் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறித்து, கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள லிம் குவான் எங்கை கேட்ட போது, அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.
இந்த தருணம், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்குடையது. இது குறித்து இன்னொரு நாள் கருத்துரைப்பதாக ஜசெக.வின் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள லிம் கிட் சியாங்கின் புதல்வரான லிம் குவான் எங் தெரித்தார்.
எனினும் ஜசெக.வின் தேர்தல் முடிவைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும், அந்தோணி லோக் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியில் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றும் பினாங்கு முன்னாள் முதலமைச்சரான லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
ஜசெக.வின் வலிமை என்பது கட்சி உறுப்பினர்களின் கூட்டு ஒத்தழைப்பினால் மட்டுமே வலுப்பெற முடியும் என்று அந்தோணி லோக் கருத்துரைத்தார்.
தேர்தலில் காணப்பட்ட இரண்டு அணிகளுக்கு இடையிலான வேற்றுமை களைந்து அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுப்பட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களை அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.