ஷா ஆலாம், மார்ச்.17-
ஜசெக.வின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் கொறடாவும் பேராட்டவாதியுமான காலச்சென்ற P. பட்டுவின் நினைவாக கல்வி நிதி ஒன்று தொடங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 48 ஆவது வயதில் மறைந்த பி. பட்டு, ஜசெக.வின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூத்தத் தலைவர்களில் ஒருவர் ஆவார். பட்டுவின் தியாகத்தைப் போற்றும் வகையில் சிரமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், உயர்க்கல்வி தொடர்வதற்கு ஜசெக நிதி வழங்கும் வகையில் பட்டுவின் பெயரிலேயே அந்த நிதி தொடங்கப்படும் என்று நேற்று ஜசெக. மாநாட்டில் அந்தோணி லோக் அறிவித்தார்.
ஜசெக. முன்னெடுத்த சஞ்சிகையான ராக்கெட்டின் பிரதம ஆசிரியரான பட்டு, 1971 ஆம் ஆண்டில் ஜசெக.வின் தன்னை பிணைத்துக் கொண்டார். ஆங்கிலப் பள்ளியின் ஒரு முன்னாள் ஆசிரியரான பட்டு, கட்சி சார்பில் பினாங்கு பாகான், பேராவில் மெங்லெம்பு மற்றும் ஈப்போ ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார்.
இதேபோன்று பேராவில் கோப்பெங் மற்றும் சுங்கை பாரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உறுப்பினரராகவும் இருந்துள்ளார்.
ஜசெக, இன்று வலுப் பெற்ற ஒரு கட்சியாக, நாட்டை வழிநடத்தும் அரசாங்கத்தில் இணைந்துள்ளது என்றால் பட்டு போன்ற போராட்டவாதிகளின் தியாகத்தினால் கிடைக்கப் பெற்ற வெற்றியாகும்.
ஜசெக.வின் அஞ்சா சிங்கமாகத் திகழ்ந்த அத்தகைய உன்னதத் தலைவர்களை கட்சியின் இளைய தலைமுறையினர் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே பட்டுவின் பெயரில் கல்வி நிதியை ஜசெக தொடங்கவிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.